திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள், நேற்று மக்களவையில் (22.03.2022), இயற்கை விவசாயத்தை குறைந்த செலவில் நடத்தி, உற்பத்தியைப் பெருக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மண்ணின் வளத்தைப் பெருக்கவும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்திடவும் அரசு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதா? என்றும், ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.
ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு:-
குறைந்த செலவில் இயற்கை விவசாயத்தை நடத்தி, உற்பத்தியைப் பெருக்கவும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்திடவும் பல்வேறு மாநிலங்களில் முயற்சிகள் நடந்து வருவதாகவும், பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உள்ளூர் வழிமுறைகளைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தைப் பெருக்க உரிய முயற்சிகள் கடந்த 2020-21ஆம் ஆண்டு முதலாகவே எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மாட்டுக் கழிவுகள், இயற்கைத் தாவரங்கள் இவற்றைக் கொண்டு நான்கு இலட்சம் ஹெக்டேருக்கும் அதிமாக இயற்கை விவசாயம் நடைபெற்று வருவதாகவும், இதுவரையில் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்கு இதுவரை 49 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக தமிழநாட்டிற்கு 31 இலட்சத்திற்கும் அதிகமாக இயற்கை விவசாயத்தைப் பெருக்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலை அளித்துள்ளார்.