மக்களவையில் திரு. டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி?
திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள், நேற்று 23.03.2022 மக்களவையில் அலுமினிய தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி வேகன்களை உறுதி செய்ய, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மூன்று நாட்களுக்கு மட்டும் தேவையான நிலக்கரி உள்ள நிலைமையை சரிசெய்ய ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படுமா? என்றும், ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.
ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு:-
அலுமினியத் தொழிற்சாலைக்குத் தேவையான 17 முதல் 26 நிலக்கரி வேகன்கள் அளவிற்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த 2021-22ஆம் ஆண்டில் 1120 இலட்சம் டன்கள் அளவிற்கு நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதாகவும், நால்கோ அலுமினியத் தொழிற்சாலைகளுக்கு 10 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி உள்ளது என்றும், அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி 12 நாட்களுக்கு உள்ளது என்றும், அமைச்சர் தெரிவித்தார்.
கோல் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தின் மூலம், அலுமினியத் தொழிற்சாலைக்கு 50 மெட்ரிக் டன்கள் அளவிற்கு நிலக்கரி கிடைத்துள்ளது என்றும், மின்னணு ஏலத்தின் மூலம் 59 மெட்ரிக் டன்கள் அளவிற்கு அலுமினியத் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைத்துள்ளது என்றும், ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலை அளித்துள்ளார்.